பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால் கூட்ரோடு அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அரிஸ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சோனியா குழந்தையை தூக்கிக்கொண்டு காஞ்சீபுரம் அடுத்த களக்காட்டூர் கீழண்டை வீதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு வந்த கணவர் வெங்கடேசன் மற்றும் மாமியார் செல்லம்மாள் (48) ஆகியோர் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோனியா தனது குழந்தையை தனது தாய்வீட்டில் விட்டு விட்டு, களக்காட்டூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜூ விசாரணை செய்தார்.
விசாரணையில் வரதட்சணை கொடுமையால் சோனியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story