தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவரம் அறிவிப்பு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவரம் அறிவிப்பு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:00 PM GMT (Updated: 22 Dec 2017 7:06 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

காப்பீடு திட்டம்

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2017–18–ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2017–ம் ஆண்டுக்கான ராபி பருவத்திற்கான நெல்–3, சோளம், கம்பு, மக்காச்சோளம், எள், சூரியகாந்தி, நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, வெங்காயம் பயிர்களுக்காக காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் ஆகிய அனைவருக்கும் ஒரே பிரிமியம் மற்றும் ஒரே காலக்கெடு ஆகும். மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளது.

பிரிமியம்

நவரை, கோடை நெல்–3 ஆகிய பயிர்களுக்கு 15.2.2018–க்குள் பிரிமியம் கட்ட கடைசி நாள் ஆகும். ஆனால் விவசாயிகள் 15.1.2018–க்குள் பிரிமியம் கட்டினால் விதைப்பு செய்ய இயலாத சூழ்நிலையிலும் 15.2.2018–க்குள் பிரிமியம் கட்டினால் நடவு செய்ய இயலாத சூழ்நிலையிலும், நடவு செய்த பின் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெற வழி உள்ளது.

மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், ஆகிய பயிர்களுக்கு பிரிமியம் செலுத்த கடைசி தேதி 15.2.2018 ஆகும். சூரியகாந்தி பயிருக்கு பிரிமியம் செலுத்த கடைசி தேதி 31.1.2018 ஆகும். பருத்தி, வெங்காயம், மிளகாய், பயிர்களுக்கு பிரிமியம் செலுத்த கடைசி தேதி 28.2.2018 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கம்பு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, வெங்காயம், மிளகாய் ஆகிய பயிர்களுக்கு 31.12.2017–க்குள் பிரிமியம் செலுத்தினால் விதைப்பு பொய்த்தல் பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெற வழி உள்ளது. வாழை பயிருக்கு 28.2.2018 அன்று பிரிமியம் செலுத்த கடைசி நாள் ஆகும். விவசாயிகள் 12.1.2018–க்குள் பிரிமியம் கட்டினால் நடவு பொய்த்தல் பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெற வசதி உள்ளது.

கரும்பு பயிருக்கு 31.10.2018 அன்று பிரிமியம் கட்ட கடைசி நாள் ஆகும். எனினும் விவசாயிகள் 31.1.2018–க்குள் பிரிமியம் கட்டினால் நடவு செய்ய இயலாத சூழ்நிலையிலும் 28.2.2018–க்குள் பிரிமியம் கட்டினால் நடவு பொய்த்தல் பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெற வழி உள்ளது.

பிரிமியம் விவரம்

விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.345–ம், சோளப் பயிருக்கு ரூ.123–ம், கம்பு பயிருக்கு ரூ.105–ம், மக்காச் சோளத்திற்கு ரூ.200–ம் பாசிபயறுக்கு ரூ.195–ம், உளுந்து பயிருக்கு ரூ.195–ம், சூரிய காந்தி பயிருக்கு ரூ.132–ம், பருத்தி பயிருக்கு ரூ.715–ம் மிளகாய் பயிருக்கு ரூ.915–ம், கரும்பு பயிருக்கு ரூ.653–ம், எள் பயிருக்கு ரூ.86–ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.218–ம், வெங்காயப்பயிருக்கு ரூ.819–ம், வாழை பயிருக்கு ரூ.2 ஆயிரத்து 520–ம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது கடன் பெறும் மற்றும் கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும்.

விவசாயிகள், பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட பொது சேவை மையங்களில் செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையினை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story