பம்மலில், கடன் தொல்லையால் தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற துணி வியாபாரி சிறையில் அடைப்பு


பம்மலில், கடன் தொல்லையால் தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற துணி வியாபாரி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Dec 2017 4:00 AM IST (Updated: 23 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

பம்மலில் கடன் தொல்லையால் மனைவி, தாய், 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற துணி வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் என்ற பிரகாஷ் (வயது 39). அதே பகுதியில் உள்ள ஏழுமலை தெருவில் துணிக்கடை நடத்தி வந்தார். கடன் தொல்லையால் அவதி அடைந்து வந்த தாமோதரன், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த தனது மனைவி தீபா (32), தாயார் சரஸ்வதி (65), மகன் ரோஷன்(8), மகள் மீனாட்சி (6) ஆகிய 4 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார், தாமோதரன் மீது 4 கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை பெற்று வந்த தாமோதரனின் உடல் நிலை தேறியது.

இதையடுத்து நேற்று மதியம் 1 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட தாமோதரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட்டு காரல் மார்க்ஸ் உத்தரவின் பேரில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story