வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி


வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 22 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-23T09:44:09+05:30)

வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரபட்டி ஊராட்சி குழந்தைபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி கலைவாணி (வயது 33). இவர்களுக்கு சினேகா என்ற மகளும், பாரத் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைவாணிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சலின் அளவு குறையவில்லை. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கலைவாணி இறந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் இறந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சுகாதார சீர்கேடு காரணமாக அந்த பகுதிகளில் மர்மகாய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம், சாக் கடை கால்வாய் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மர்மகாய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் இறந்ததை தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும் கொசு புகை மருந்தும் அடிக்கப்பட்டது.

வேடசந்தூர் பகுதியில் கடந்த 3 மாதங்களில் மர்ம காய்ச்சலுக்கு 9 பேர் இரையாகியுள்ளனர். தற்போது கலைவாணியும் இறந்துள்ளதால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. எனவே வேடசந்தூர் பகுதிகளில் மர்மகாய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story