சென்னை விமான நிலையத்தில் விமான கழிவறையில் கிடந்த தங்கத்தை கடத்தி வந்தவர்களை பிடிக்க தனிப்படை
தங்கத்தை கழிவறையில் போட்டுச் சென்றவர்களை கண்டு பிடிக்க விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்றுமுன்தினம் விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விமானம் தரை இறங்கியதும் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது விமான கழிவறை தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள். துபாயில் இருந்து கடத்தி வந்த அந்த தங்கத்தை கழிவறையில் போட்டுச் சென்றவர்களை கண்டு பிடிக்க விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருபவர்கள், அவற்றை விமான கழிவறை, இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு, அந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்லும் போது உள்நாட்டு பயணி போல் வந்து எடுத்து சென்று விடுகின்றனர். இந்த நூதன கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்லும் முன் அந்த விமானங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் குழு தீவிரமாக சோதனை செய்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறோம். இந்த நூதன கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.
Related Tags :
Next Story