கொலை வழக்கு: நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் வசித்து வந்தவர் சத்யராஜ். கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சத்யராஜ் சென்னை தீவுத்திடல் சத்யாநகர் பகுதியில் குடியேறினார். சத்யராஜ் தன்னிடம் தகராறு செய்தது குறித்து தினகரன் தனது நண்பரான சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமாரிடம் தெரிவித்து உள்ளார்.
இதைதொடர்ந்து சத்யராஜ் மீது விஜிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய விஜி திட்டமிட்டார். இந்தநிலையில் 4.3.2013 அன்று சத்யராஜ் தனது சகோதரியுடன் பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அப்போது, விஜி தனது நண்பர்களான சென்னை கொண்டிசெட்டி தெருவைச் சேர்ந்த அப்பன்ராஜ், வேலு ஆகியோருடன் சேர்ந்து சத்யராஜை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், குற்றம்சாட்டப்பட்ட விஜி, அப்பன்ராஜ், வேலு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story