எண்ணூரில் திருட்டு வழக்கில் மகன் கைதானதால் அவமானத்தில் தந்தை தற்கொலை
திருட்டு வழக்கில் மகன் கைதானதால் அவமானம் தாங்காமல் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9-வது தெருவில் வசித்து வந்தவர் வேலு (வயது 62). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராம்குமார்(26).
கடந்த 5-ந்தேதி எண்ணூர் உலகநாதபுரத்தில் உள்ள வினோத்குமார் என்ற தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடிய வழக்கில் எண்ணூர் போலீசார் ராம்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகளான விக்னேஷ், அஜித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
திருடிய நகைகளை அன்னை சிவகாமி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புதைத்து வைத்து உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது, நகைகளை காணவில்லை. யாரோ அதை எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் ராம்குமார் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தை வேலு மற்றும் தாயாரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதனால் வேலு மனவேதனை அடைந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த வேலு, திருட்டு வழக்கில் மகன் கைதானதுடன், வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானம் தாங்க முடியாமல் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story