குரோம்பேட்டையில் லாரி மீது கார் மோதல்; டிரைவர்-காவலாளி பலி டீ வியாபாரி படுகாயம்


குரோம்பேட்டையில் லாரி மீது கார் மோதல்; டிரைவர்-காவலாளி பலி டீ வியாபாரி படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2017 5:30 AM IST (Updated: 23 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் விபத்துக்குள்ளாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் டிரைவர் மற்றும் காவலாளி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தன.

குரோம்பேட்டை பஸ் நிலைய சிக்னல் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் சென்று போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் வந்த லாரியின் முன்பகுதி சேதமடைந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

லாரி மீது கார் மோதல்

நள்ளிரவு 12.30 மணியளவில் மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த கார் குரோம்பேட்டையில் ஊழியர்களை இறக்கிவிட்டு கிண்டி நோக்கி வேகமாக வந்தது.

அப்போது சாலை ஓரம் லாரி நிற்பதை கவனிக்காமல் வேகமாக வந்த கார் டிரைவர், லாரி அருகில் வந்ததும் காரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற டீ வியாபாரி மீது மோதியதுடன், சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

டிரைவர்-காவலாளி பலி

கார் டிரைவரான திண்டுக்கல் மாவட்டம், ஒரத்தநாடு, முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ்(வயது 24) மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த தனியார் நிறுவன காவலாளியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(54) இருவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கார் மோதியதில் படுகாயம் அடைந்த டீ வியாபாரியான குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன்(34) உயிருக்கு போராடினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தியாகராஜனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பலியான சரண்ராஜ், ராஜேந்திரன் ஆகியோரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story