திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும்


திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-23T02:54:38+05:30)

போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா அரசியல் மற்றும் வேலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.

திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கனவான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக எல்லாம் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் பல தடவை மாறி மாறி வந்து உள்ளது. தற்போது மத்திய சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்து உள்ளன.

ஏற்கனவே மாநகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாக உருவாகும். எனவே மத்திய சிறைச்சாலை அருகே இடம் தேர்வு என அறிவித்ததை மாற்றி திருச்சி நகருக்கு வெளியே பஞ்சப்பூர் போன்ற இடங்களில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி விமான நிலையம், செம்பட்டு பகுதியில் இயங்கி வந்த 8 தோல் தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் முடிவால் மூடப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி இந்த தொழிற்சாலைகளை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

மணல் தட்டுப்பாட்டை போக்கவும், கட்டுமான தொழிலை பாதுகாக்கவும் தமிழக அரசு எம்.சாண்ட் மணலை தரமானதாக மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதற்காக போர்க்கால அடிப்படையில் எம்.சாண்ட் குவாரிகளை தொடங்கவும், வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட நீதிமன்றம் விதித்து உள்ள தடையை மாநில அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். காந்திமார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பழைய பால்பண்ணை முதல் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story