தாராபுரம் தனியார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து பாரதியார் பல்கலைக்கழகம் உத்தரவு


தாராபுரம் தனியார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து பாரதியார் பல்கலைக்கழகம் உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2017 9:26 PM GMT (Updated: 2017-12-23T02:56:29+05:30)

ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. நிர்ணயித்த சம்பளம் வழங்காததால் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து பாரதியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

வடவள்ளி, 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷப் தார்ப் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இது கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரியாக இருந்து வந்தது. இங்கு பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி., பி.சி.ஏ., எம்.காம் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இங்கு 465 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 35 ஆசிரியர்களும், 15 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கல்லூரியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், யு.ஜி.சி. நிர்ணயித்த சம்பளத்தை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு வழங்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யு.ஜி.சி. நிர்ணயித்த சம்பளத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் அந்த உத்தரவுப்படி கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

அங்கீகாரம் ரத்து

இதையடுத்து அந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்தது. அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும், அது குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் குழு அமைத்தது. இந்த விசாரணை குழு சமீபத்தில் ஆட்சிமன்ற குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் வருகிற கல்வியாண்டு முதல் பிஷப் தார்ப் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வனிதா கூறுகையில், ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக அந்த கல்லூரியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக் கப்பட்டு, அதன் அறிக்கையில் அடிப்படையில் பிஷப் தார்ப் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார். 

Next Story