ஈரோடு பரிமளம் மகாலில் 150 அரங்குகளுடன் கட்டிட பொருட்கள் கண்காட்சி தொடங்கியது


ஈரோடு பரிமளம் மகாலில் 150 அரங்குகளுடன் கட்டிட பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Dec 2017 4:00 AM IST (Updated: 23 Dec 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பரிமளம் மகாலில் 150 அரங்குகளுடன் கட்டிட பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட சிவில் என்ஜினீயர்கள் சங்கம் மற்றும் ஈரோடு சிவில் என்ஜினீயர்கள் அறக்கட்டளை சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு கண்காட்சி தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் எஸ்.தேவானந்தன் விழா அறிக்கையை வாசித்தார்.

ஆர்.பி.பி. குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஆர்.பி.செல்வசுந்தரம் ரிப்பன் வெட்டி கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கண்காட்சி மலரை வெளியிட்டார். அதை கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் எம்.சையதுசாகீர் பெற்றுக்கொண்டார்.

150 அரங்குகள்

விழாவில் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் ஆர்.மோகன்ராஜ், முன்னாள் தலைவர் ஆர்.சிவலிங்கம், கோட்ட தலைவர் என்.செல்வகுமார் ஆகியோர் பேசினார்கள். இதில் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரமவுலி, சைலாசன், சிவபாலன், நாகராஜன், பூபதி, செந்தில்குமார், குப்புசாமி, அசோக்குமார், என்.குகன், வி.ஆர்.பழனியப்பன், கே.சம்பத்குமார், வி.சண்முககணபதி, மக்கள் செய்தி தொடர்பாளர் கே.ஆர்.பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க தலைவர் டி.சண்முகன் வரவேற்று பேசினார். முடிவில் கண்காட்சி துணைத்தலைவர் கே.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

இதுகுறித்து கண்காட்சி நிர்வாகிகள் கூறும்போது, “கண்காட்சியில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கட்டிட பொருட்கள், வீடு மற்றும் அலுவலக அலங்கார பொருட்கள், வீட்டுவசதி பொருட்கள் ஆகியன பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கட்டுமான ஆலோசனை மையங்கள், நிதி நிறுவன ஆலோசனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது”, என்றனர்.

சொற்பொழிவு

கண்காட்சியில் தினமும் மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு பெருந்துறை கே.கே.சி. கொங்கு குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கான யோகாசன போட்டியும், மாலை 6 மணிக்கு “தொலைந்ததும் விளைந்ததும்” என்ற தலைப்பில் டாக்டர் சிவராமனின் சொற்பொழிவும் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடன நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இன்னிசை நிகழ்ச்சியுடன் கண்காட்சி நிறைவடைகிறது. 

Next Story