இங்கிலாந்து தூதரகத்தின் ‘தலைமை எலி பிடிப்பாளர்’


இங்கிலாந்து தூதரகத்தின் ‘தலைமை எலி பிடிப்பாளர்’
x
தினத்தந்தி 23 Dec 2017 1:45 PM IST (Updated: 23 Dec 2017 12:58 PM IST)
t-max-icont-min-icon

ஜோர்டானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ‘லாரன்ஸ்’ என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இப்பூனைக்கு டுவிட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிவருகிறதாம்.

இங்கிலாந்து தூதரக அலுவலர்களால் ‘லாரன்ஸ் ஆப் அம்டன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூனை, விலங்குகள் காப்பகம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டது. தூதரகத்தில் அதிகாரப்பூர்வ தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டது.

இந்தப் பூனையின் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் சமூக வலைதளத்தில் ‘லாரன்ஸ் ஆப் அம்டன்’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது.

தற்போது லாரன்சை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர் கிறார்கள்.

இதுகூறித்து இங்கிலாந்து துணை தூதரக அதிகாரி லாரா டவுபன் கூறுகையில், “லாரன்ஸ் மூலம் ஜோர்டானின் வித்தியாசமான பக்கத்தை இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இதனால் ஜோர்டானில் உள்ள இங்கிலாந்து தூதரக அலுவலகத்துக்கு தனித்துவம் கிடைத்துள்ளது.

கருப்பு- வெள்ளை நிறத்தில் காணப்படும் லாரன்ஸ் எலி பிடிப்பதைத் தவிர்த்து, அது செய்யும் பிற செயல்களும் டுவிட்டரில் பதிவிடப்படுகிறது. டுவிட்டரில் லாரன்சை பின்தொடரும் சிலர், அதன் புகைப்படத்தின் கீழ் அது சற்றுப் பருமனாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளதால் லாரன்ஸ் தற்போது சோகமாக இருக்கிறது. அதனால் அதைச் சரிசெய்ய லாரன்ஸ் உடற்பயிற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் ராணுவ அதிகாரி டி.இ. லாரன்ஸ் நினைவாக இந்தப் பூனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இங்கிலாந்து வெளி யுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story