கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு மட்டுமே உள்ளது


கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு மட்டுமே உள்ளது
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு மட்டுமே உள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பெங்களூருவில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா உள்பட மாநில அளவிலான அத்தனை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில துணைத்தலைவர் சீனிவாச பிரசாத் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரி அனந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், எடியூரப்பா தலைமையில் சட்டசபை தேர்தலில் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், இதற்காக எவ்வாறு உழைக்க வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அடுத்து வரும் 60 நாட்களில் கட்சியை பூத் மட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று எங்கள் கட்சி தலைவர் அறிவுறுத்தினார். வருகிற 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இளைஞர் அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் தலித், மகளிர், பிற்படுத்தப்பட்டோர் அணிகளின் சார்பில் மாநாடுகளை நடத்த வேண்டும். 224 தொகுதிகளிலும் மாநாடுகளை நடத்த வேண்டும். மாற்றத்திற்கான பயண பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா தலைமையில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக கலந்து கொள்ள வேண்டும். கருத்துவேறுபாடுகளை மறந்து, கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த பாடுபட வேண்டும் என்று தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அனந்தகுமார் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “யார் யாருக்கு டிக்கெட் வழங்கப்படும் என்பதை பகிரங்கப்படுத்தக்கூடாது. சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு மட்டுமே உள்ளது. எடியூரப்பா உள்பட தலைவர்கள் டிக்கெட் குறித்து தகவலை வெளியிட்டால் அது வெறும் வாக்குறுதியே. அது அதிகாரபூர்வ அறிவிப்பு கிடையாது. அதனால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியதாக சொல்லப் படுகிறது. 

Next Story