கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு


கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2018 4:30 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

நான் அரசியலுக்கு வரத்தயார் என்றும், கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

பெங்களூரு,

2017-ம் ஆண்டின் சிறந்த நபர் விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விருது வழங்கி பேசினார். விருதை பெற்றுக்கொண்ட பிரகாஷ்ராஜ் பேசியதாவது:-

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால் அடிக்கடி சவால் விடுத்தால், நான் அரசியலுக்கு வரத்தயார். கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு பெந்தகாளூர் என்ற பெயர் உண்டு. இங்கு அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு இடம் தரக்கூடாது. கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது.

அவர்களை பார்த்து நீங்கள் யார் என்று கேள்வி கேட்க வேண்டும். வீடு வீடாக சென்று அமைதியை சீர்குலைப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையான பிறகு என்னிடத்தில் நிறைய மாற்றங்கள் உண்டானது. அதன் பிறகு தான் நான் பேச ஆரம்பித்தேன். சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கேள்விகளை கேட்டேன். எனக்கு எந்த சாதி பேதமும் இல்லை.

நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை. ஹிட்லர் காலத்தில் தான் ஒரே மதத்தில் உள்ளவர்கள் வெவ்வேறானவர்கள் என்று பிரித்து பார்க்கப்பட்டன. இப்போது அதற்கு இடம் தரக்கூடாது. எனக்கும் பணம், வெற்றி, புகழ் எல்லாம் கிடைத்துள்ளது. நிம்மதியான வாழ்க்கையை விட்டுவிட்டு நான் ஏன் பேச தொடங்கி இருக்கிறேன் என்றால், இந்த சமுதாயத்தில் அரசியல், சமூக சூழ்நிலை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு கேள்வி கேட்கும் தைரியத்தை ஏற்படுத்தியவர்கள் மூத்த பத்திரிகையாளர்கள் தான். அவர்களின் வழிகாட்டுதலால் தான் நான் வளர்ந்து இருக்கிறேன். சர்வாதிகாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. வரும் நாட்களில் இன்னும் உறுதியாக பேசுவேன்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார். 

Next Story