ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் ஓடியதால் பரபரப்பு
ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோட்டின் மைய பகுதியில் பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடை பெரும்பள்ளம் கிராமத்தில் தோன்றி ஈரோடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் வரை ஓடி காவிரியில் கலக்கிறது. இயற்கை நீரூற்றுகளாலும், கீழ்பவானி கசிவு நீராலும் பெரும் ஓடையாக ஓடி வந்த பெரும்பள்ளம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை கால்வாயாக ஓடி வருகிறது.
சூரம்பட்டி அணைக்கட்டு வரை நல்ல நீராக இருக்கும் இந்த ஓடையில் கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி உள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், பாலித்தீன் பைகள், மருத்துவக்கழிவுகள், வீடுகளின் கழிவுகள், கடைகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் என்று அனைத்தும் இங்கு வந்து சேர்கிறது.
மேலும் மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள் என்று அனைத்து கழிவுகளும் இந்த ஓடையில் கொட்டப்படுவதால் ஓடை அருகே செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. கொசுக்களுக்கு வாழ்விடமாக உள்ள இந்த ஓடையில் செடி, கொடிகளும் ஆங்காங்கே வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏதோ ஒரு சாயப்பட்டறையில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் பெரும்பள்ளம் ஓடையில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீருடன், சாயக்கழிவுகளும் கலந்து ஓடியது. இவ்வளவு நாளாக சாக்கடை கழிவுநீர் மட்டுமே ஓடிய பெரும்பள்ளம் ஓடையில் நேற்று சாயக்கழிவுநீர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘பெரும்பள்ளம் ஓடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓடை தூர்வாரப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் ஓடையின் இருபுறங்களிலும் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன.
இரவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து திறந்து விடப்பட்ட சாயக்கழிவுநீர் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் பெரும்பள்ளம் ஓடையில் ஓடுகிறது. எனவே சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவுநீரை திறந்து விட்ட தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பெரும்பள்ளம் ஓடையை உடனடியாக தூர்வார வேண்டும்’ என்றனர்.