நோய் பரவும் அபாயம்: வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதி கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதி கால்வாய்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதி கால்வாய்கள் மிகவும் பழமை வாய்ந்தவை ஆகும். ஒரு காலத்தில் ஏரிகளில் இருந்து வெளிவரும் நீர் இந்த கால்வாய்களில் பயணம் செய்து இருக்கின்றன. அதனால் இந்த பகுதிகள் நெல் விளையும் பூமியாக இருந்தது என்று பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட கால்வாய்களில் இன்று துர்நாற்றம் கலந்த சாக்கடை நீர் ஓடுகிறது. மேலும், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் தேங்குவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வியாசர்பாடி பாரதிநகர், சர்மா நகர், சாஸ்திரி நகர், கக்கன்ஜி காலனி, எம்.கே.பி.நகர், திருவள்ளுவர் நகர் போன்ற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் முகம் சுழிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கின்றன.
இதனால் சாக்கடை நீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. அந்த பகுதி மக்கள் மூக்கைப்பிடித்து கொண்டு அந்த வழியாக கடந்து செல்வதை பார்க்க முடிகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வந்து, இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்கள் கூறும்போது, ‘நாங்களும் பல முறை மாநகராட்சிக்கு புகார் கொடுத்து விட்டோம். இதுவரை அவர்கள் வந்து அகற்றவில்லை. தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளினால் கொசு உற்பத்தியாகிறது. வீடுகளுக்குள் வரும் இந்த கொசுக்கள் கடிப்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளில் இருந்தபடியே அருகில் செல்லும் கால்வாய்களில் பிளாஸ்டிக் கவர்களில் குப்பைகளை அப்படியே தூக்கி வீசுகிறார்கள். இதை அவர்கள் செய்வதை நிறுத்தினால் இதுபோல் குப்பைகள் தேங்காது. நாங்களும் அவ்வப்போது சென்று குப்பைகளை அகற்ற தான் செய்கிறோம்’ என்றனர்.