சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.வி. ரத்னம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து த.வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் வணிகர்களுக்கு எதிராக உள்ளது. ஏற்கனவே வாட் (மதிப்பு கூட்டு வரி), ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் பாதிப்பு அடைந்து, வட்டிக்கு கடன் வாங்கி கடைகளை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்போது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரியான பொருட்களைத்தான் வியாபாரிகள் விற்பனை செய்தாலும், அதற்காக அபராதம், தண்டனை அதிகமாக போடுகிறார்கள். எனவே உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் தேவையற்றது. இதனை உடனடியாக கைவிடவேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தம் தான் அனைத்துக்கும் காரணம். எனவே அதனை முறியடிக்கும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.