கட்டி முடித்து ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் இருக்கும் ரே‌ஷன் கடை கட்டிடம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


கட்டி முடித்து ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் இருக்கும் ரே‌ஷன் கடை கட்டிடம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2017 10:30 PM GMT (Updated: 31 Dec 2017 10:23 PM GMT)

சென்னை வியாசர்பாடி, பாரதிநகர் கிழக்கு தெருவில் சுமார் 600 முதல் 700 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடி, பாரதிநகர் கிழக்கு தெருவில் சுமார் 600 முதல் 700 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் இருக்கும் எஸ்.ஐ. காலனிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பாரதிநகர் கிழக்கு தெருவில் புதியதாக ரே‌ஷன் கடை கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, பாரதிநகர் கிழக்கு தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த பழைய கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் அந்த இடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டி ஓராண்டு ஆகியும் அங்கு ரே‌ஷன் கடை எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதிமக்கள் காத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, ‘ரே‌ஷன் கடைக்கு என்று புதிய கட்டிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. ஆனால் நாங்கள் அனுமதிக்கவில்லை. எங்களுக்கு ரே‌ஷன் கடை இங்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story