சேலத்தில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்


சேலத்தில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

2018 புத்தாண்டு பிறப்பை யொட்டி சேலம் மாநகரில் நேற்று நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து ஏராளமான பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

சேலம்,

2018 புத்தாண்டு பிறந்ததை கொண்டாடும் வகையில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். சேலம் புதிய பஸ்நிலையம் எதிரில் திரளான இளைஞர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் அவர்கள் ஆடியபடி புத்தாண்டுக்கு வரவேற்பு அளித்தனர். சிலர் சக நண்பர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சேலம் புதிய பஸ்நிலையம், 4 ரோடு, பழைய பஸ்நிலையம் என முக்கிய சாலைகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்ததை காணமுடிந்தது. ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் உற்சாகத்துடன் வேகமாக வலம் வந்து வாகனங்களில் சென்றவர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில பகுதிகளில் பலூன்களில் புத்தாண்டு வாழ்த்துகள் என்று எழுதி மேலே பறக்கவிடப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனை

சேலம் நகரில் ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டமாக சிறப்பு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி சேலம் 4 ரோடு அருகேயுள்ள குழந்தை ஏசு பேராலயத்தில் சேலம் மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கு தந்தை கிரகோரிராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். இதேபோல், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், சூரமங்கலம் சி.எஸ்.ஐ.ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

Next Story