ஜி.எஸ்.டி.யால் பழைய கார்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது கார் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் தகவல்


ஜி.எஸ்.டி.யால் பழைய கார்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது கார் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2018 9:45 PM GMT (Updated: 2018-01-02T00:12:06+05:30)

ஜி.எஸ்.டி.யால் பழைய கார்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது என்று அகில இந்திய கார் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் நோயல் தெரிவித்தார்.

துடியலூர்,

கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை கார் வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் அகில இந்திய யூஸ்டு கார் சங்கங்களின் அறிமுக விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கார் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.

தென்னிந்திய கார் டீலர்ஸ் மற்றும் ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரசாந்த்குமார், பொதுச்செயலாளர் சந்தோஷ் வி.சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில முதன்மை துணைத்தலைவர் எட்வின் வரவேற்றார்.

விழாவில் அகில இந்திய கார் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் நோயல் பேசும்போது, ஜி.எஸ்.டி. வரியால் பழைய கார்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பலர் இந்த தொழிலை விட்டு சென்றுவிட்டனர். வாகன பதிவுகளை டிஜிட்டல் முறையில் செய்யும்போது வாங்குபவரும், விற்பவரும் நேரில் வர வேண்டி உள்ளது. நாட்டில் பழைய கார்களை வாங்க 80 சதவீத மக்கள் விரும்புகின்றனர். டெல்லி போன்ற நகரங்களில் மாசு கட்டுப்பாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை உபயோகப்படுத்தக்கூடாது என்பதால், பழைய கார் விற்பனை பாதிக்கப்படுகிறது.

கார் டீலர்கள் பழைய கார்களை விற்பனை செய்யும்போது, திருட்டு கார்களை விற்பதில்லை. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பதிவு எண்களை வாகனங்களுக்கு தர மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம் என்றார்.

கூட்டத்தில் 28 சதவீதம் முதல் 51 சதவீதம் வரை உள்ள பழைய கார்களுக்கான விற்பனைக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட மாறுதல்களில் வட்டார போக்குவரத்து விண்ணப்ப மாற்றங்களால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதை தவிர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. முன்னதாக மாவட்ட கார் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.சந்தோஷ்குமாருக்கு, அகில இந்திய கார் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் நோயல் நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கேரள யூஸ்டு கார் டீலர்ஸ் மற்றும் புரோக்கர் சங்க மாநில தலைவர் காஜா ஹூசைன், பொதுச்செயலாளர் சபரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார் வியாபாரிகள் நல சங்க மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


Next Story