தந்தை கண்டித்ததால் 5–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


தந்தை கண்டித்ததால் 5–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2018 9:45 PM GMT (Updated: 2018-01-02T00:27:33+05:30)

தந்தை கண்டித்ததால் 5–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

கோவை,

கோவை சரவணம்பட்டி மாருதிநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). லேத் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவரது மனைவி சந்திரகாந்தி (38). இவர்களது மகன் கபில்ராஜ் (10). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் கபில்ராஜின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களிடம் தன்னை கல்லாறு பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கபில்ராஜ் கூறி உள்ளான். அதற்கு அவர்கள் மற்றொரு நாள் அழைத்துச்செல்வதாக கூறி விட்டு தங்களின் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் மனம் உடைந்த கபில்ராஜ் வீட்டில் யாரிடமும் பேசாமல் படுக்கை அறைக்கு சென்று படுத்துக்கொண்டான்.

நேற்று காலை புத்தாண்டு அன்று ஏன் படுத்து இருக்கிறாய், குளித்து விட்டு வா என்று ஜெயபிரகாஷ் கண்டித்ததாக கூறப்படுகிறது. உடனே கபில்ராஜ் குளியலறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டான். நீண்டநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜெயபிரகாஷ், கதவை உடைத்து திறந்து பார்த்தார்.

அப்போது, அங்கு துணியை தொங்கப்போடும் இரும்புக்கம்பியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கபில்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story