சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2018 5:00 AM IST (Updated: 2 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் தேவாலயத்துக்கு சென்று திரும்பியபோது சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

ஆவடி,

திருமுல்லைவாயல் இ.எஸ்.ஐ. அண்ணாநகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் சின்னப்புள்ளையா. இவரது மகன் பவுல்(வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), சிமியோன்(17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராமில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார்.

பின்பு வழிபாடு முடிந்ததும் நேற்று அதிகாலை 2 மணியளவில் 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பவுல் ஓட்டி வந்தார். ஆவடி பஸ் நிலையம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே திடீரென ஒரு வாகனம் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பவுல் தனது மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த பவுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சிமியோன் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பவுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story