கேபிள் டி.வி உரிமையாளரை வீடு புகுந்து வெட்டிய மர்ம கும்பல்


கேபிள் டி.வி உரிமையாளரை வீடு புகுந்து வெட்டிய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-02T00:47:13+05:30)

கிழக்கு தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கேபிள் டி.வி உரிமையாளரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தபடி சென்றனர். இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை, முடிச்சூர் சாலை, வேளச்சேரி சாலை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் வழக்கம்போல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. அப்போது கிழக்கு இரும்புலியூர் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களை முதுகில் தட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு தாம்பரம் பரணி நெல்லையப்பர் தெருவில் காஜா மொய்தீன் என்பவர் வீட்டின் வாசலில் நின்றிருந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முதுகில் தட்டியபடி சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மேலும் 20–க்கும் மேற்பட்டவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அரிவாள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பரணி நெல்லையப்பர் தெருவில் வன்முறையில் ஈடுபட்டனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காஜா மொய்தீனின் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். அந்த பகுதியில் சாலையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்கள் மற்றும் வீட்டின் வெளியில் நின்றிருந்த ஆண்களை மிரட்டினார்கள். அந்த கும்பலை பார்த்ததும் பஜனை கோவில் தெருவில் வீட்டு வாசலில் நின்றிருந்த கேபிள் டி.வி உரிமையாளர் கிருஷ்ணன் (வயது 45) என்பவர் வீட்டிற்குள் ஓடினார்.

அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல் கிருஷ்ணனின் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த கும்பல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. உடனடியாக சேலையூர் போலீஸ் உதவி கமி‌ஷனர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்ற விபரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இதில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.


Next Story