திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு


திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

பின்னலாடை நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

திருப்பூர்,

பின்னலாடை நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து குடும்பத்தோடு திருப்பூரில் குடியேறி இங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். இதன்காரணமாக மாநகரில் வாடகை வீடுகளில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் குடியிருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் வருகையால் மாநகரில் தொழில் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது காவல்துறையை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள், வன்முறைகள் போன்றவற்றை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மூலமாகவே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் பள்ளி மாணவிகள் பெரும்பாலும் திருமணம் ஆன இளைஞர்களின் வலையில் வீழ்ந்து காதல் வயப்பட்டு அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் சம்பவங்களும் கடந்த காலத்தில் அதிகரித்துள்ளது. திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016–ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் கடந்த 2017–ம் ஆண்டு 10 வழக்குகளும், தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றம் செய்தவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். திருப்பூர் மாநகரில் 12 வழக்குகள் என்பது மற்ற மாவட்டத்தை ஒப்பிடும்போது அதிகமாகவே உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பு தொடர்பாக மகளிர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–

10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பெரும்பாலும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபர் தான் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள். தனியாக சிறுமிகள் விளையாடும்போது நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்துச்சென்று தங்கள் வக்ரத்தை சிறுமியிடம் காட்டிவிடுகிறார்கள். சிலர் சிறுமிகளை ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவுகொடுக்கிறார்கள்.

திருப்பூரை பொறுத்தவரை ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டில் தனியாகஇருக்கிறார்கள். அதுபோல் விடுமுறை நாட்களிலும் தனியாகவே உள்ளார்கள். இதை நன்கு கவனித்து அந்த சிறுமிகளிடம் தங்கள் வேலையை காட்டி விடுகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூட சிறுமிகளிடம் தங்கள் காம இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

பள்ளி மாணவிகள் திருமணமான இளைஞர்கள், பள்ளிக்கு அருகே சந்திக்கும் நபர்களிடம் காதல் வயப்பட்டு தங்கள் வாழ்க்கையை பறிகொடுக்கிறார்கள். பெரும்பாலான சம்பவங்களை பார்க்கும்போது, பள்ளி மாணவிகள் வீட்டில் வேலை செய்யாமல் இருக்கும்போது அவருடைய தாயார் கண்டபடி திட்டுகிறார்கள். இதை பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர்கள் கவனிக்கிறார்கள். அந்த மாணவி அழுது சோகத்தில் இருக்கும் சமயத்தில், பக்கத்து வீட்டு இளைஞர்கள் அந்த சிறுமிகளிடம் ஆறுதலாக பேசுகிறார்கள். ‘செல்லம், கண்ணு, குட்டிம்மா’ என்று கொஞ்சி பேசுகிறார்கள்.

இது அந்த சிறுமிகளுக்கு பெரிய ஆறுதலாக அமைகிறது. தனது தாய், தந்தை இப்படி கொஞ்சி பேசும்போது சந்தோ‌ஷம் அடையாத சிறுமிகள், பக்கத்து வீட்டை சேர்ந்த ஆண் ஒருவர் தன்னிடம் இவ்வளவு பாசத்தை கொட்டுகிறாரே என்று நினைத்து அவர்களிடம் நெருக்கம் காட்டுகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் மாணவிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதுடன் கடை வீதிகளுக்கும் தனியாக அழைத்துச்செல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் மாணவிகளோ, இது தான் காதல் என்று நினைத்து அவர்களுடன் எல்லை மீறி விடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஊர் சுற்றுகிறார்கள். மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து பின்னர் அந்த மாணவியை மீட்டு கொண்டு வருகிறோம். 18 வயதுக்கு கீழ் இருப்பதால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறோம். இதில் என்ன கொடுமை என்றால் பெரும்பாலான மாணவிகள், திருமணம் ஆன நபருடன் செல்கிறார்கள். திருமணமாகி அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை தெரிந்து இருந்தும் கூட, தங்களிடம் கொஞ்சி பேசும் நபரிடம் மாணவிகள் தங்களை இழந்து விடுகிறார்கள். காதலனிடம் இருந்து மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், அந்த மாணவிகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதற்கு வெகுகாலம் ஆகிறது.

இதுதவிர சமூக வலைதளங்கள் மூலமாகவும் பள்ளி மாணவிகள் எளிதாக வேறொரு ஆண் நபருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்மார்ட் செல்போன்கள் மாணவிகளை வேறு பாதைக்கு அழைத்துச்செல்கிறது. மேலும் குடிபோதை ஆசாமிகள் தங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் பெண் குழந்தைகளை சீரழிக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

குழந்தைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகளை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியம். காவல்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து திருப்பூர் மாநகரில் பள்ளிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும். எதிர்கால பெண் குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காக்கவும் முடியும்.


Next Story