முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரியலூர்,

2ஜி வழக்கில் விடுதலை பெற்ற பின்னர் முதல் முறையாக அரியலூருக்கு, முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நேற்று முன்தினம் இரவு காரில் வந்தார். அரியலூர் ரெயில் நிலைய மேம்பால பகுதியில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் சால்வை போத்தியும், மலர் கிரீடம் அணிவித்தும், ஆளுயர ரோஜாப்பூ மாலை போட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது மேள-தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. அங்கிருந்து காரில் திறந்தவெளியில் நின்றபடி அண்ணாநகர், கே.கே.நகர், ராஜாஜி நகர், பூக்காரத்தெரு, முருகன்கோவில், சத்திரம், எம்.பி. கோவில் தெரு, மார்க்கெட் தெரு வழியாக அரியலூர் பஸ் நிலையத்தை அடைந்தார். அப்போது அவருக்கு வழிநெடுக வாழ்த்து கோஷங்களை எழுப்பிய படியே தி.மு.க.வினர் வந்தனர். பின்னர் அரியலூரில் உள்ள அண்ணா சிலைக்கு ஆ.ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

களங்கம் நீங்கியது

2ஜி வழக்கு பொய்யாக தொடுக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டேன். இதனால் தி.மு.க.விற்கு ஏற்பட்ட களங்கம் நீங்கியது. கழகத்திற்கும், எனக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து அரியலூர் மாவட்டத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்திய கழகத்தின் அனைத்து அணி பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து வி.கைகாட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் தங்க.துரைராஜ், அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், திருமானூர் ஒன்றிய செயலாளர் கென்னடி, தா.பழூர் ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன், அரியலூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் மதிவாணன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் மதியழகன், கோவிந்தன், செந்தில்குமார், செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் (தெற்கு), செந்துறை ஒன்றிய அவை தலைவர் சிவபிரகாசம் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story