வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சிறுவன் உள்பட 2 பேர் கைது


வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2018 3:45 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பட்டுக்கேட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக்கு கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் ரூ.20 லட்சத்தை வங்கி அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். நாட்டுச்சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.20 லட்சம் இருந்த பெட்டியை கொள்ளையடித்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணுகுடியை சேர்ந்த வீரமணி (வயது23), சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (24) ஆகிய 2 பேரை முன்பு கைது செய்து இருந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

2 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை துவரங்குறிச்சி ஆட்டோ நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதிராம்பட்டினம் சுரக்காய் கொல்லை பகுதியை சேர்ந்த சாமிநாதன் (28) என்பதும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேருக்கும் வங்கி பணம் கொள்ளையடிக்கப் பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story