ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:45 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இராக்கால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் ஏகாந்த தீபாராதனை, பள்ளியறை தீபாராதனை நடந்தது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து குவிந்தனர். இவர்களில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் திருவுருவ படத்தை வைத்து அவரது திருப்புகழை பாடியவாறு வந்தனர்.

பஸ்கள், வேன்கள், கார்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் இருந்தே திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டது.

கோவிலில் பழுதடைந்த கிரிப்பிரகார மண்டபம் அகற்றப்பட்டதால், அதன் அருகில் தற்காலிக இரும்பு தகடாலான மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.20, ரூ.100, ரூ.250 கட்டண தரிசனம் என தனித்தனியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். 

Next Story