மாணவி கடத்தல் விவகாரத்தில் மோதல் அபாயம்: 61 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது


மாணவி கடத்தல் விவகாரத்தில் மோதல் அபாயம்: 61 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2018 4:45 AM IST (Updated: 2 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மாணவி கடத்தல் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு 61 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு சமூக விரோத கும்பல் ஊடுருவி உள்ளதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனி அம்பேத்கர்நகரை சேர்ந்த 23 வயது வாலிபர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கைப்பந்து விளையாட்டு வீரர். இவரும், கல்லூரி மாணவியும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாணவியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என ஊருக்குள் தகவல் பரவியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், நல்லம்பள்ளியில் பாதுகாப்புக்காக போலீசாரை குவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று 2-வது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பாதி போலீசார் சீருடை அணிந்தும், பாதி போலீசார் சீருடை அணியாமலும் ரோந்து சுற்றி வருகிறார்கள். சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியில் அம்பேத்கர்நகர், புதுநகர், பழைய நகர், காந்திநகர் ஆகிய 4 பகுதிகள் உள்ளன. இவற்றில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் புதுநகர் பகுதியில் சீனு என்பவரது வீட்டின் முன்புள்ள விளையாட்டு திடலில் சிலர் பெட்ரோல் குண்டு தயார் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது புதுநகர் பகுதியை சேர்ந்த சீனு (வயது21), லோகநாதன்(32), கமலக்கண்ணன் மற்றும் 20 வயது வாலிபர் ஆகிய 4 பேர் குவார்ட்டர் பாட்டில்களில் திரியுடன் கூடிய பெட்ரோல் குண்டுகள் தயார் செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 51 பெட்ரோல் குண்டுகளையும், சீனு வீட்டில் இருந்து 10 பெட்ரோல் குண்டுகளையும் கைப்பற்றி அவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனு, லோகநாதன், 20 வயது வாலிபர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கமலக்கண்ணன் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கடத்தியதாக கூறப்படும் வாலிபரின் வீட்டை சிலர் தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெட்ரோல் குண்டுகள் தயாரித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபரின் வீட்டை தாக்கியதாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள புதர்களில் பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் போலீசார் மாறி, மாறி ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

நல்லம்பள்ளியில் வன்னியர் தெரு, முஸ்லிம் தெரு, வேதகாரன் தெரு, குரும்பர் தெரு, வாணியர் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த தெருக்களிலும் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக நல்லம்பள்ளியில் இருதரப்பினரிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றமான சூழல் நேற்று 2-வது நாளாக நிலவியது. பொதுமக்கள், வணிகர்களிடையே ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது. வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நல்லம்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் நேற்று காரில் நல்லம்பள்ளிக்கு வந்து பார்வையிட்டார்.

இதனிடையே வெளியூர் களில் இருந்து சமூக விரோத கும்பல்கள் நல்லம்பள்ளிக்குள் ஊடுருவுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, புதிதாக ஆட்கள் யாரும் ஊருக்குள் ஊடுருவுகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஊருக்குள் வரும் வழிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தாசில்தார் பழனியம்மாள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரசேகர், வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துமாணிக்கம், காந்தி மற்றும் அதிகாரிகள் நல்லம்பள்ளியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். நல்லம்பள்ளியில் 144 தடைஉத்தரவு பிறப்பித்தால் மட்டுமே வெளியாட்கள் ஊடுருவலை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். 

Next Story