குடகில் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டம் தீமூட்டி உற்சாகம்


குடகில் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டம் தீமூட்டி உற்சாகம்
x
தினத்தந்தி 1 Jan 2018 11:30 PM GMT (Updated: 2018-01-02T04:10:32+05:30)

குடகில் கடும் குளிர், பனிப்பொழிவிலும் தீமூட்டி சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடினர்.

குடகு,

மேற்குதொடர்ச்சி மலைச்சாரலில் பச்சை பசேல் என காபி தோட்டங்கள், மலை முகடுகளுடன் அமைந்துள்ளது தான், குடகு மாவட்டம். மலையில் இருப்பதால் இங்கு ஆண்டுதோறும் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தற்போது குடகு மாவட்டத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க கர்நாடகத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக குடகில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். பாகமண்டலா, தலைக்காவிரி, அபி நீர்வீழ்ச்சி, நிசர்கதாமா, குசால் நகரில் உள்ள தங்கக்கோவில், துபாரே யானைகள் முகாம், மடிகேரி ராஜா ஷீட் ஆகிய சுற்றுலாத்தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். மேலும் சுற்றுலா வந்தவர்கள் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சொகுசு விடுதிகளில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டை கொண்டாட குடகில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் அவர்களுக்கு தங்குவதற்கு ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கிடைக்கவில்லை. இதனால் ஏராளமானோர் சாலையோரமாக வாகனங்களை நிறுத்தி அதில் படுத்திருந்தனர். அத்துடன் குடகு மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் குளிர், பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து நின்றனர்.

சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஆடி,பாடி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் மடிகேரி, குசால் நகர், சுண்டிகொப்பா, சித்தாபுரா, பாகமண்டலா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தீமூட்டி குளிர்காய்ந்தப்படி உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களும் நள்ளிரவில் புத்தாண்டை ஆடி, பாடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

குறிப்பாக மடிகேரி ராஜா ஷீட் பகுதியில் நேற்று முன்தினம் மாலையே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ராஜா ஷீட் பகுதியில் இருந்து பார்த்தால் 3 மலை முகடுகளின் நடுவில் சூரியன் அஸ்தமனமாகும் ரம்மியமான காட்சிகளை கண்டுகளிக்கலாம். இதனால் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சூரிய அஸ்தமனத்தை காண ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமி இருந்தனர். நள்ளிரவு வரை அவர்கள் அங்கேயே அமர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர புத்தாண்டையொட்டி குடகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அதேப் போல் கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வனப்பகுதிகள் நிறைந்த பகுதி என்பதால் குடகு மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் பட்டாசு வெடித்து சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புத்தாண்டு கொண்டாடினர்.

புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் குடகு மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story