மது போதையால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாஸ்மாக் நிதி வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்


மது போதையால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாஸ்மாக் நிதி வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:45 AM IST (Updated: 3 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மது போதையால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் நிதி வழங்கிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.

மதுரை,

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகம் முழுவதும் ஏராளமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மதுவுக்கு அடிமையான பலர் கல்லீரல் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். சென்னை உள்பட 12 அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன.

ஆனால் சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இல்லை. எனவே கல்லீரல் பாதித்த நோயாளிகளின் நலன் கருதி மேற்கண்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும், அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய நிபுணர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மது விற்பனை மூலம் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட தொகையை மது போதையால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக செலவிட வேண்டும். இது குறித்து பதில் அளிப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும்“ என்று வாதாடினார்.

பின்னர், இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story