கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொது மக்கள் மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொது மக்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையையொட்டி உள்ள பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து காயலார்மேடு கிராமத்திற்கு செல்லும் வழியில் சுமார் 60 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள டிரான்ஸ்பர்மர் ஒன்றில் இருந்து தனியார் பட்டா நிலம் வழியாக மின் கம்பம் அமைத்து ஏற்கனவே மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. வார்தா புயலின்போது மேற்கண்ட 2 மின்கம்பங்களும் கீழே விழுந்து விட்டது. அதன் பின்னர் தங்களது பட்டா நிலத்தில் மின்கம்பம் அமைத்திட மேற்கண்ட தனியார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனையடுத்து அங்கிருந்து சற்று தொலைவில் மற்றொரு டிரான்ஸ்பார்மர் மூலம் மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு மின்துறையினர் மாற்று வழியில் தற்காலிகமாக மின்வினியோகம் செய்து வந்தனர்.

இதன் மூலம் அந்த பகுதிக்கு முறையாக மின்வினியோகம் முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மின்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த மின் வினியோகத்தால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கடுமையாக அவதிப்பட்டனர். குடிதண்ணீருக்கான மோட்டார்களை கூட அவர்களால் முறையாக இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தங்களது குடியிருப்பு பகுதிக்கு ஏற்கனவே இருந்தது போன்று தடையில்லா மின்வினியோகம் வழங்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பெத்திக்குப்பம் சந்திப்பு சாலையில் இருந்து காயலார்மேடு செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் சாலையில் காய்ந்த வாழை மரம், குடிநீர் டப்பாக்களை தடுப்பாக வைத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கம் நோக்கிச்சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர்.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவர்களிடம் பேசி ஏற்கனவே இருந்த இடத்திலேயே புதிய மின் கம்பங்களை அமைத்து உரிய வகையில் எந்த வித பாதிப்பும் இன்றி குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்து மின்வினியோகம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அஙகு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story