உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடக்கம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
மடத்துக்குளம்,
கட்டுமான பணிகளில் முக்கிய மூலப்பொருளாக மணல் உள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் அரசே நேரடியாக மணல் குவாரிகளை நடத்துகிறது. இதன் மூலமாக அரசுக்கு வருமானம் கிடைப்பதோடு அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பது தடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவாரிகளை மூடுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பெரும்பாலான மணல் குவாரிகள் செயல்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உடுமலை, மடத்துக்குளம், பகுதிகளில் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடத்தொழிலாளர்கள் உள்ளனர். இதில் மேஸ்திரி, கொத்தனார், சித்தாள், கையாள் என கட்டுமான பணிகளில் பல்வேறு கட்டிடங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.600 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது மணல் குவாரிகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு விட்டதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளதால், தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
இது குறித்து கட்டிட தொழிலாளர்கள் கூறியதாவது:–
கட்டிட தொழில் பார்த்து வரும் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மணல் தட்டுப்பாடு காரணமாக ஆற்று மணல் 4 மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் வீடு, வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. அத்தியாவசிய கட்டிடப்பணிகள் மற்றும் அவசரமாக கட்ட வேண்டிய கட்டிடங்கள் மட்டுமே கட்டப்படுகிறது.
மேலும் திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மேலும் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும். குவாரிகளில் குறிப்பிட்ட அளவு மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆற்று மணலுக்கு மாற்று மணலாக கூறப்படுவது எம்.சாண்ட் எனப்படும் செயற்கைமணல். கருங்கல் ஜல்லிகளை சரியான அளவுகளில் உடைத்து தயாரிக்கப்படுவதே செயற்கை மணலாகும். உலக நாடுகள் பலவற்றிலும் கட்டுமான பணிகளில் செயற்கை மணல்பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் செயற்கை மணலில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் உறுதி தன்மை இருக்காது என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இது குறித்து உடுமலையை சேர்ந்த என்ஜினீயர் சேமேஸ்வர பூபாரதி கூறுகையில் ‘‘ கட்டுமான பணிகளில் எம்.சாண்ட் மண் எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்தலாம். இதுவும் கட்டுமான துறையில் தரக்கட்டுப்பாடான ஐ.எஸ்.383 கொண்டதுதான். செயற்கை மணலை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் ஆற்று மணலை விட வலிமையானதாக இருக்கிறது. மேலும் ஒரு யூனிட் ரூ.4 ஆயிரத்திற்கு செயற்கை மணல் கிடைக்கிறது.’’என்றார்.
கிராமப்புற பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மின்சக்தியுடன் கூடிய பசுமைவீடுகள் கட்டும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக பசுமை வீடு திட்டம் பல பகுதிகளில் முடங்கி உள்ளது. எனவே செயற்கை மணல் மூலம் இந்த திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.