குடிபோதையில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து தனியார் ஊழியர் சாவு
குடிபோதையில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து தனியார் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்,
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது43). சோப்பு கம்பெனி ஊழியர். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் பாஸ்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே ஈச்சங்காடு பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உதவி சப்–இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என குறித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர், ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பது தெரியவந்தது. அதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்து இருப்பது தெரியவந்ததுள்ளது.
புதுவையை அடுத்த வானூர் ஆதனப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரமுத்து (46). கூலித்தொழிலாளி. புத்தாண்டை முன்னிட்டு சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதை தலைக்கேறி சாலையோரம் படுத்திருந்தார். மறுநாள் காலை அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது.பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த சேதராப்பட்டு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.