பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை
பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தந்த காவல்துறை, உள்ளாட்சித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன். சுற்றுலா பயணிகள் வந்தால்தான் வியாபாரம் பெருகி வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
எங்களோடு இணைந்து மாநிலத்தின் நிர்வாகி (கவர்னர் கிரண்பெடி) புத்தாண்டு தினத்தில் பணிபுரிந்து உள்ளார். அதையும் இந்த நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். அவரோடு எங்களுக்கு மாற்று கருத்துகள் இருந்தாலும் அவர் பணி செய்ததை பாராட்டுகிறேன். இந்த 2018–ம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், நிதிகளை பெற நானும் அமைச்சர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.
முத்தலாக் அறிவிப்பு செல்லாது என்ற சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர உள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடமும் பேச்சு நடத்தி ஒருமித்த கருத்தை கொண்டுவந்தால் நல்லது. இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க தயார் என்று கூறியுள்ளார். கட்சி ஆரம்பிப்பது என்பது ஜனநாயக நாட்டில் அவரவர் உரிமை. அவருக்கு எனது வாழ்த்துகள். தமிழகம் பரந்து விரிந்த மாநிலம். இங்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர். அதில் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். ரஜினிகாந்தின் நடவடிக்கையை பொறுத்துதான் அவர் நிலைத்து இருப்பாரா? என்பதை கூறமுடியும்.
அ.தி.மு.க.வில் உள்ள குழப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சி ஆரம்பிப்பதாக கூறலாம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் வலுவாக உள்ளன. ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அவர் கூறியுள்ளார். அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை. அவரது பேட்டியை பார்க்கும்போது தெளிவில்லாததுபோல் தெரிகிறது. இருந்தபோதிலும் காலம்தான் அவரது செயல்பாடு பற்றி பதில் சொல்லும்.
சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின் டெல்லியை தவிர அனைத்து மாநிலங்களின் வருவாயும் குறைந்துள்ளது. இதில் நமது மாநிலத்தின் வருவாய் குறித்தும் அறிய வாய்ப்பு இல்லை. வருமானம் தொடர்பான நகலை தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் 15 நாட்களில் அதன் நகல் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி: தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி–சேலை கிடைக்காத நிலையில் பொங்கல் பண்டிகைக்காவது இலவச பொருட்கள் கிடைக்குமா?
பதில்: பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: கவர்னருக்கு பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். இது தொடருமா?
பதில்: அவர் நல்லது செய்தால் பாராட்ட வேண்டும். நாங்கள் எப்போதும் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். மாநிலத்தின் அன்றாட நிர்வாகத்தை அமைச்சர்கள்தான் கவனிக்கவேண்டும். அதில் ஏதேனும் விளக்கம் தேவை என்றால் மாநிலத்தின் நிர்வாகி (கவர்னர்) துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி விளக்கம் பெறலாம். கவர்னரின் நடவடிக்கை தொடர்பாக விதிகளை சுட்டிக்காட்டி 15 கடிதங்களை அனுப்பியுள்ளேன். ஆனால் அவர் கடமையை செய்ய தவறிவிட்டார்.
கேள்வி: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?
பதில்: தணிக்கை அறிக்கை மட்டுமே இறுதியானது அல்ல. 2 ஜி விவகாரத்திலும் இதேபோல் கற்பனையாக ஒரு தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை குழு தலைவர் வினோத் ராய் கூறினார். அந்த வழக்கு என்னவானது? இப்போது அவருக்கு பாரதீய ஜனதா அரசு புதிய பதவி ஒன்றை கொடுத்துள்ளது. தணிக்கை அறிக்கையை ஏற்பதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய பாராளுமன்ற குழுக்கள் உள்ளன. இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.