புனே வன்முறை சம்பவம்: ராகுல்காந்தி, சரத்பவார் கண்டனம்
புனே வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
மும்பை,
புனே வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல்காந்தி கண்டனம்புனேயில் நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வெடித்த வன்முறை சம்பவத்தில், வாலிபர் ஒருவர் பலியானார். இதைத்தொடர்ந்து, மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வன்முறை தொற்றிக்கொண்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுத்த சமூக வலைதள பதிவில், ‘‘இந்திய சமுதாயத்தில் தலித் மக்கள் அடிமட்டத்தில் இருக்க வேண்டும் என்பதே பாரதீய ஜனதா– ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிச பார்வை. ரோகித் வெமுலா, புனே பீமா– கோரேகாவ் சம்பவம் ஆகியவை எதிர்ப்புக்கு வலிமையான அடையாளங்கள்’’ என்றார்.
சரத்பவார்தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
வன்முறை சரியானது அல்ல. அரசு நிர்வாகம் எந்தவொரு முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத வரையில், வதந்திகளும், தவறான புரிந்து கொள்ளுதலும் பரவி கொண்டு தான் இருக்கும். வன்முறையில் துரதிருஷ்டவசமாக வாலிபர் ஒருவர் பலியாகி இருக்கிறார். அரசியல் மேடையிலும், சமூக களத்திலும் உள்ளவர்கள் எரிச்சலூட்டும் வகையில் பேசாமல், நிலைமையை நல்லிணக்கத்துடனும், அமைதியாகவும் தணிக்க வேண்டும்.
இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்மேலும், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்த விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை கண்டித்து மும்பையில் அவரது அலுவலகம் முன்பு திரண்டு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.