திருச்சி மாநகராட்சி 20, 48-வது வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி


திருச்சி மாநகராட்சி 20, 48-வது வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி 28, 40-வது வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றில் சில வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், பல வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் குறைவாகவும் உள்ளன. இதே போல் வார்டுகளின் பரப்பளவிலும் வேறு பாடு உள்ளது. இந்த பிரச்சினையை தீர்த்து அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் எண்ணிக்கை ஒரே அளவில் இருக்கும் வகையில் வார்டுகள் மறுவரையறை செய்து பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மறு வரையறையின்படி பல வார்டுகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. பல தெருக்கள் வார்டு விட்டு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. பல வார்டுகளின் எண்களும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குளறுபடியால் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதன்படி திருச்சி மாநகராட்சி 40-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று அந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான முத்துச்செல்வம் தலைமையில் திரண்டு வந்து மாநகராட்சி ஆணையரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 40-வது வார்டு 56 மற்றும் 57 என இரண்டு வார்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 56-வது வார்டு பகுதி என்பது கருமண்டபம், பிராட்டியூர், ராம்ஜிநகர், கொத்த மங்கலம் ஆகிய பகுதிகளை கொண்டது.

இந்த பகுதியில் 57-வது வார்டில் இருக்க வேண்டிய அரசு காலனி, இ.பி காலனி, பிரான்சினா காலனி, பழைய ரேஷன் கடை தெரு, எம்.ஜி.ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர் போன்ற பகுதிகளை 56-வது வார்டு பகுதியில் இணைத்து இருப்பதால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எனவே இந்த பகுதிகளை புதிய 57-வது வார்டில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு நின்ற அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அவர்கள் அந்த மனுவில் 28-வது வார்டு மறு சீரமைப்பில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் கொண்ட பகுதிகளை பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மறு சீரமைப்பால் வாக்கு செலுத்த நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலையும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பல தேவைகளுக்கு தங்களுக்கு அருகில் உள்ள பகுதியை விட்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது.

இதேபோல, 57-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வனிதா, 40-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஓ.பாலசுப்பிர மணியன், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், ஜங்ஷன் பகுதியை சேர்ந்த வசந்த குமார் ஆகியோரும் மனு கொடுத்தனர். 

Next Story