7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை மேலும் ஒரு மாணவன் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு


7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை மேலும் ஒரு மாணவன் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2018 6:30 AM IST (Updated: 3 Jan 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வீட்டில் தூக்குப்போட்டு 7–ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். மேலும் ஒரு மாணவன் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்பூர்,

சேலம் அருகே கருப்பூர் பக்கமுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் இருக்கும் வெத்தலைக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தனக்கொடி. இவர்களது மகன் லோகேஷ் (வயது 12) சங்கீதப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.

இதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்–பிரியா தம்பதியின் மகன் மோகன் (15). இவன் அருகில் உள்ள மாட்டுக்காரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறான். மோகனும், லோகேசும் நண்பர்கள். நேற்று காலை வழக்கம்போல் 2 பேரும் அவரவர் பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். ஆனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

வெத்தலைக்காரனூர் செல்லும் சாலையில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு மரத்தடியில் மதியம் வாயில் நுரை தள்ளிய நிலையில் மோகன் மயங்கி கிடந்தான். இதுபற்றி அறிந்ததும் அவனது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று மோகனை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அவன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 2 பேரும் தானே பள்ளிக்கு சென்றனர்; லோகேஷ் என்ன ஆனான்? என்று சந்தேகமடைந்த அவனது பாட்டி ருக்மணி மற்றும் உறவினர்கள் அவனை அந்த பகுதியில் தேடினார்கள். ஆனால், அவன் கிடைக்கவில்லை.

பின்னர் ருக்மணி தனது வீட்டிற்கு வந்தார். ஆனால், கதவை அவரால் திறக்க முடியவில்லை. அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை தள்ளி திறந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் லோகேஷ் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து ருக்மணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் வேலைக்கு சென்றிருந்த கிருஷ்ணனும், தனக்கொடியும் பதறியபடி வந்து மகனின் உடலை பார்த்து கதறியது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் லோகேஷ் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் லோகேசும், மோகனும் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளனர். பின்னர் வி‌ஷத்தை வாங்கிவந்து 2 பேரும் குடித்திருக்கலாம். இதில் மோகன் மயங்கி விழுந்து விட்டான். எனவே, அவன் இறந்து விட்டதாக கருதிய லோகேஷ் தான் சாகவில்லையே என எண்ணி வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் எதற்காக வி‌ஷம் குடித்தனர் என்பது தெரியவில்லை.

எனவே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மோகனிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 7–ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டதும், மேலும் ஒரு மாணவன் வி‌ஷம் குடித்ததும் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



Next Story