நெல்லும் எள்ளும் கைவிட்ட நிலையில் சூரியகாந்தி பயிரிட்டு ராமநாதபுரம் விவசாயி சாதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சியால் நெல்லும், எள்ளும் கைவிட்ட நிலையில் மாற்று விவசாயத்தில் இறங்கிய விவசாயி சூரியகாந்தி பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை அடியோடு பொய்த்து போய்விட்டதாலும், வைகை தண்ணீர் விவசாயத்திற்காக போதிய அளவு வராததாலும் நெல் உள்ளிட்ட விவசாயங்கள் இல்லாமல் போய்விட்டது. இதன்காரணமாக விவசாயிகள் இனியும் மழையை நம்பி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்திற்கு தள்ளப்பட்டுஉள்ளனர். விவசாயிகளின் மனஓட்டத்தை புரிந்துகொண்ட வேளாண்மைத்துறை மாற்றுப்பயிர்களை பயிரிட ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் முதன்முறையாக பட்டதாரி விவசாயி ஒருவர் மழையை எதிர்பார்க்காமல் சத்தமின்றி சூரியகாந்தி விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் அருகே உள்ள முதுநாள் பகுதியை சேர்ந்த மாரி என்பவருடைய மகன் முருகானந்தம்(வயது 31). பி.காம் பட்டதாரியான இவர் சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அழிந்துவரும் விவசாயத்தை காக்க முதுநாள் அருகே வடக்கு புதுத்தெரு பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்துள்ளார். மழையின்றி நெல் கருகிப்போனதால் எள் விவசாயம் செய்துள்ளார். அதுவும் கருகிபோனதால் கடைசியில் முயற்சியை கைவிடாமல் கடந்த 2 மாதங்களுக்குமுன் சூரியகாந்தி பயிரிட்டுள்ளார்.
சிறிதளவு மழையே பெய்தாலும் இருக்கின்ற நீரில் சூரியகாந்தி 2 ஏக்கரிலும் பூத்து குலுங்கி விதைகளுடன் காட்சிஅளிக்கிறது. சூரியகாந்தியின் பருவமான 65 நாட்களில் முழுமையாக வளர்ந்து முற்றிய விதைகளுடன் சூரியகாந்தி விவசாயம் சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளது. முழுஅளவு சூரியனை போல பூக்கள் விரித்து விதைகளுடன் சிரித்து குலுங்கும் சூரியகாந்தியை பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
இதுகுறித்து பட்டதாரி விவசாயி முருகானந்தம் கூறியதாவது:– விவசாயத்தை மீண்டும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கினேன். நெல் மற்றும் எள் விவசாயம் கைவிட்ட நிலையில் மாற்று விவசாயமான சூரியகாந்தி பயிரிட திட்டமிட்டு கிலோ விதை ரூ.600–க்கு வாங்கி விவசாயம் செய்தேன். எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருமுறை பெய்த மழையால் சூரியகாந்தி தப்பி பிழைத்து நன்கு வளர்ந்துஉள்ளது. இதில் முதல்கட்டமாக ½ ஏக்கரில் விதைகளை அறுவடை செய்து 100 கிலோ விதைகள் எடுத்துள்ளேன். மீதம் உள்ள 1½ ஏக்கரில் உள்ள விதைகளை ஓரிருநாளில் அறுவடை செய்ய உள்ளேன். இதில் 250 கிலோ வரையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். தற்போது கிடைத்துள்ள விதைகளை கொண்டுசென்று கடையில் கொடுத்தபோது கிலோவிற்கு ரூ.28 மட்டுமே கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
2 ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் வாங்கியபோது கிலோ ரூ.600–க்கு வாங்கிய நான் அதனை அறுவடை செய்து விற்க சென்றபோது ரூ.28–க்கு தான் விலைபோகிறது. இந்த விவசாயத்திற்காக இதுவரை ரூ.75,000 வரை செலவு செய்துள்ளேன். நெல்லும், எள்ளும் கைவிட்ட நிலையில் சூரிய காந்தி பயிரிட்ட எனக்கு தற்போது நல்ல விலை கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே, விவசாயத்துறையினர் இந்த விதைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் என்னைபோன்ற மாற்றுப்பயிர் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.