வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா சிலை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா சிலை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் இருந்தன. தற்போது மீண்டும் அதே 21 வார்டுகள் அமைக்கப்பட்டு 33 ஆயிரத்து 899 பேர் மறுவரையறை செய்து ஒரு வார்டுக்கு 1,614 பேர் வீதம் இருப்பது போல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெயர் ஒரு வார்டில் இருந்து 2, 3-வது வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் 10-வது வார்டு பொதுமக்கள் தங்களை 8-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 14-வது வார்டு பொதுமக்கள் தங்கள் பெயரை 8, 10, 11, 19 ஆகிய 4 வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று ஜெயங்கொண்டம் அண்ணாசிலை முன்பு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டுகள் மறுவரையறை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 2-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்,இதுகுறித்து தினசரி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். அப்போது பொதுமக்கள், இதுகுறித்து எங்களுக்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும். திடீரென அறிவிப்பு கொடுத்து விடுமுறை நாட்களில் தபால் மற்றும் மெயிலில் அனுப்ப சொன்னால் எப்படி அனுப்புவது என்று தெரிவித்தனர்.

மேலும் நேற்று முன்தினம் 10, 14-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் மனு கொடுக்க சென்ற போது 3 மணியோடு அலுவலக நேரம் முடிந்து விட்டது என கூறி மனுவை அலுவலர்கள் வாங்க மறுத்து விட்டனர். ஏற்கனவே குறிப்பிட்ட வார்டில் உள்ளவர்களை மீண்டும் அதே வார்டில் சேர்க்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்கவும், ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளிலும் வார்டுகளை மாற்றவும் தங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே 1,614 பேருக்கு மேல் இருப்பவர்களை வார்டில் இருந்து வெளியில் இருக்காமல் மறுவரையறை செய்ய வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story