கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் இந்த மாதத்தில் நிறைவுபெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் இந்த மாதத்தில் நிறைவுபெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2018 2:15 AM IST (Updated: 4 Jan 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் இந்த மாதத்தில் (ஜனவரி) நிறைவுபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் இந்த மாதத்தில் (ஜனவரி) நிறைவுபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கோவில்பட்டி நகரசபை கூட்ட அரங்கில் நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் விசுவலிங்கம், உதவி பொறியாளர்கள் லட்சுமணன், விஜயபாலன், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நகரசபை ஆணையாளர் அச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

குடிநீர் திட்ட பணிகள் நிறைவுபெறும்

கோவில்பட்டியில் கடந்த 1976–ம் ஆண்டு இருந்த மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு முதலாவது குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2011–ம் ஆண்டு அப்போதைய முதல்– அமைச்சர் ஜெயலலிதா கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டமும், தூத்துக்குடியில் 4–வது குடிநீர் திட்டமும் அறிவித்தார். அதன்படி குடிநீர் திட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாநகருக்கு 4–வது குடிநீர் திட்டத்தை அர்ப்பணித்தார். இதேபோன்று கோவில்பட்டி நகரிலும் 2–வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்று விட்டன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வெள்ளோட்ட பணிகள் நடந்தன. இந்த மாதத்தில் (ஜனவரி) கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் முழுவதும் நிறைவுபெற்று குடிநீர் வழங்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக...

மறைந்த முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மணிமண்டபமும் அமைக்கப்படும்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கலைந்து விடும் என்று கூறி வந்தார். அதனையே தற்போது டி.டி.வி.தினகரனும் கூறி வருகிறார். ஆனால் வருகிற 2021–ம் ஆண்டு வரையிலும் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.


Next Story