குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தேனாடு ஊராட்சி அலுவலகம் முற்றுகை


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தேனாடு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 4 Jan 2018 3:30 AM IST (Updated: 4 Jan 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தேனாடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுகாலனி, சகாயபுரம் மற்றும் கங்காபுரம் ஆகிய கிராமங்களில் 300 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீர் பள்ளம் ஊற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குழாய்கள் பழுது, மோட்டாரில் உந்துசக்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால், கிராமத்துக்கு சீரான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் குழாய்கள் துருப்பிடித்துள்ள நிலையில் பல இடங்களில் தண்ணீர் கசிந்து விரயமாவதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்துச்சென்று ஆற்றுநீரை பிடித்துக்கொண்டு செங்குத்தான நடைபாதையில் கடும் சிரமத்துக்கு இடையே எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காகவே பெரும்பாலான நாட்களில் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து தண்ணீர் சுமந்து வருகிறார்கள். எனவே தங்களது கிராமத்துக்கு வரும் உடைந்த குழாய்களை சரி செய்து மீண்டும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனாடு ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக மாவட்ட கலெக்டர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தேனாடு ஊராட்சி அலுவலகம் முன் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நடந்த இந்த போராட்டத்தில் ஊர் தலைவர் கணபதி தலைமையில் கிராம பிரமுகர்கள் ஆதித்தன், வில்சன், தர்மதுரை உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து பெண்கள் பலர் ஊராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கோத்தகிரி தாசில்தார் மகேஸ்வரி, தலைமை இடத்து துணை தாசில்தார் கனிசுந்தரம், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோல்டி சாராள், ஜெயபிரகாஷ் மற்றும் சோலூர்மட்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்வேல்முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறும் போது, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க 1500 மீட்டர் தொலைவுக்கு புதிய குடிநீர் குழாய்கள் மாற்றி அமைப்படுகிறது அதற்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வருகிற 7–ந் தேதி தொடங்க உள்ளது. 10 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து 3 மணி நேரம் நீடித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுபாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதிகாரிகள் 10 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணாத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story