மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பல் மூலம் 58 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடிக்கு வந்தது
மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று 58 ஆயிரம் டன் மணல் கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி,
மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று 58 ஆயிரம் டன் மணல் கொண்டு வரப்பட்டது.
மணல் தட்டுப்பாடுதமிழ்நாட்டில் சமீபகாலமாக கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்தது.
இந்த மணலை லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு மணலை எடுத்து செல்ல தடை விதித்தது. இதனால் மணல் துறைமுகத்திலேயே தேங்கி கிடக்கிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் துறைமுக கப்பல் தளத்தில் இருந்த மணல் துறைமுகத்துக்கு வெளியில் உள்ள காலி இடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு கப்பலில் மணல்இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து உள்ளது. அதன்படி ‘கிரேட்டன் ஈகிள்‘ என்ற கப்பல் மூலம் 58 ஆயிரத்து 616 டன் மணல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த கப்பல் நேற்று தூத்துக்குடியை வந்தடைந்தது. விரைவில் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு மணல் இறக்கப்பட உள்ளது.
ஏற்கனவே வந்த மணல் விற்பனை செய்ய முடியாமல் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மேலும் ஒரு கப்பலில் மணல் வந்து உள்ளது. இதனால் விரைவில் மணல் விற்பனைக்கு அனுமதி கிடைத்து, முக்கிய தேவையான மணல் விலை குறையும் என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.