கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை


கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை
x
தினத்தந்தி 4 Jan 2018 4:30 AM IST (Updated: 4 Jan 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கத்தில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் பெற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

வேலூர்,

பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மனிஷா, தீபா, சங்கரி, ரேவதி ஆகியோர் கடந்த நவம்பர் 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை ரமாமணி, வகுப்பாசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் 2 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மாணவிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் நிவாரணத்தொகையை மாணவிகளின் பெற்றோர் வாங்க மறுத்தனர். 4 மாணவிகளின் பெற்றோர்களும் மாவட்ட கலெக்டர் ராமனை சந்தித்து, மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அரசு அறிவித்த நிவாரண தொகையை பெற்றுக்கொள்வதாக அவர்கள் கூறினர். கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகள் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு ராணிப்பேட்டையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், 4 மாணவிகளின் பெற்றோர்களிடம் அரசு வழங்கிய ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது மாணவிகளின் பெற்றோர் மேலும் சில கோரிக்கைகளை மனுவாக உதவி கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நெமிலி தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ராம்மோகன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பனப்பாக்கம் நகர செயலாளர் லோகநாதன், சோளிங்கர் தொகுதி செயலாளர் வெற்றிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story