ராமநத்தம் அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
ராமநத்தம் அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
ராமநத்தம்,
ஆந்திர மாநிலத்தில் இருந்து இரும்பு தடவாள பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னை வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ராஜா (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சிதம்பரத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜவேல்(32) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திட்டக்குடி அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி முற்றிலும் உருக்குலைந்து போனது.
இந்த விபத்தில் டிரைவர் ராஜா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் லாரியின் இடிபாடுகளுக்குள் ராஜவேலின் வலது கால் சிக்கிக் கொண்டது. இதனால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதுகுறித்து ராஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி, திட்டக்குடி தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜவேலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காயமடைந்த ராஜவேலை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.