பல்லடம் அருகே நிட்டிங் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் சாவு


பல்லடம் அருகே நிட்டிங் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பணியின்போது நிட்டிங் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பொங்கலூர்,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 20). இவர் திருப்பூர் பல்லடம் ரோடு, சின்னக்கரையில் உள்ள ஒரு தனியார் நிட்டிங் நிறுவனத்தில் கடந்த 20 நாட்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது நிட்டிங் எந்திரத்தின் அருகே சென்று அதனுள் விழுந்த ஒரு பொருளை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது புவனேஸ்வரியின் தலை நிட்டிங் எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து எந்திரத்தை நிறுத்தினர். பின்னர் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புவனேஸ்வரியை எந்திரத்தில் இருந்து மீட்டனர். ஆனால் எந்திரத்திற்குள் சிக்கியதால் புவனேஸ்வரியின் தலை முற்றிலும் நசுங்கிப்போனது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புவனேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த புவனேஸ்வரியின் பெற்றோர் புவனேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். புவனேஸ்வரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நிட்டிங் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்காத நிட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயக்குமார்(40) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story