தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்தால் 2 மடங்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை


தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்தால் 2 மடங்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Jan 2018 3:15 AM IST (Updated: 4 Jan 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்தால் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு,

பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் சரியான விவரங்களுடனும், உரிய தரத்தோடும் எண்ணெய் பாக்கெட்டுகளின் நிறுவனத்தின் பெயர், எண்ணெயின் பெயர், தொலைபேசி எண்ணுடன் கூடிய சரியான முகவரி, எண், அளவு, விலை, பயன்படுத்தும் கால அளவு, சத்துகளின் விவரம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.

2 சமையல் எண்ணெய் கலந்து விற்பனை செய்பவர்கள் அக்மார்க் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் சமையல் எண்ணெய் வாங்கும்போது மேற்கண்ட விவரங்களை பார்த்து தரமான எண்ணெய் வகைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். சரியான விவரங்கள் இல்லாமலோ, சரியான சமையல் எண்ணெயின் பெயரை குறிப்பிடாமலோ அல்லது ஏற்கனவே தடை செய்யப்பட்ட லேபிள் குறைபாடுடைய பாக்கெட்டுகளில் மீண்டும் சமையல் எண்ணெய் விற்பனை செய்தாலோ அவர்களுக்கு 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அதிக அளவு வேதிப்பொருள் கலப்பு இல்லாமல் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லம் வேதிப்பொருள் அதிகம் கலந்து தயார் செய்யப்பட்டது ஆகும். எனவே பொதுமக்கள் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை வாங்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லத்தை வாங்கக்கூடாது.

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றாமல் முழுமையான விவரங்கள் இல்லாமலும், சரியான தயாரிப்பாளர் முகவரி இல்லாமலும், தரம் குறைந்த சமையல் எண்ணெய் மற்றும் வெல்லம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும். மேலும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

பொதுமக்கள் இது சம்பந்தமான புகார்கள் இருந்தால் 94440–42322 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0424–2223545 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.


Next Story