இரும்பு, உருக்கு ஆலையை தனியார் மயமாக்க திட்டம் அருண்ஜெட்லி, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்


இரும்பு, உருக்கு ஆலையை தனியார் மயமாக்க திட்டம்  அருண்ஜெட்லி, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
x
தினத்தந்தி 4 Jan 2018 3:30 AM IST (Updated: 4 Jan 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு மற்றும் உருக்கு ஆலையை தனியார் மயமாக்கும் திட்டம் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய மந்திரி அருண்ஜெட்லி, ஆலை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பத்ராவதி,

இரும்பு மற்றும் உருக்கு ஆலையை தனியார் மயமாக்கும் திட்டம் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய மந்திரி அருண்ஜெட்லி, ஆலை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று எடியூரப்பா கூறினார்.

‘பரிவர்த்தனா யாத்திரை’

கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ‘பரிவர்த்தனா யாத்திரை’ எனும் மாற்றத்திற்கான பயணத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். அவர் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பா.ஜனதாவுக்கு ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதிக்கு சென்றார். பத்ராவதி உத்த காலனி பஸ் நிறுத்தத்தை சென்றடைந்த அவருக்கு அங்கு திரண்டிருந்த சுமார் 1,500–க்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து அவர் தொண்டர்களுடன் ஊர்வலமாக பத்ராவதி பழைய நகரில் உள்ள கனகமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பூரண கும்ப மரியாதை

அவர் மாதவாச்சாரி சதுக்கத்திற்கு சென்றபோது, அங்கு திரண்டிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜனதா மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் எடியூரப்பாவை வரவேற்றனர். அதையடுத்து பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினருடன் எடியூரப்பா கனகமண்டபத்திற்கு சென்றார். அங்கு பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டத்திற்கு நகர தலைவர் அனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மஞ்சுநாத் வரவேற்றார். மேல்சபை உறுப்பினர் ஆயனூர் மஞ்சுநாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமார் பங்காரப்பா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராகவேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

பத்ராவதியில் உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது உண்மைதான். அதை தடுத்து நிறுத்தக்கோரி ஆலை தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்து வலியுறுத்தினர். மேலும் மனுவும் கொடுத்தனர்.

அதையடுத்து நான்(எடியூரப்பா) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மத்திய மந்திரி அருண்ஜெட்லி இப்பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்கான அழைப்பு விரைவில் வரும். தொழிலாளர்களின் கோரிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அவர்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன்.

இன்னும் 4 மாதங்களில்...

அதேபோல், மைசூரு காகித தொழிற்சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு மூடப்படும் நிலையில் உள்ளது. அதையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். இன்னும் 4 மாதங்களில் மாநிலத்தில் நலிவடைந்துள்ள சிறுதொழிற்சாலைகள் அனைத்தையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புத்துயிர் தந்து தொழிலாளர்களை காப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story