கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்: சென்னையில் கால் டாக்சி டிரைவர்கள் சாலைமறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்: சென்னையில் கால் டாக்சி டிரைவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:45 AM IST (Updated: 4 Jan 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

வாடகை கார் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சுற்றுலா மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

வாடகை கார்களுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். தன்னிச்சையாக செயல்படும் ‘ஓலா, ஊபர், பாஸ்ட் டிராக்’ நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி, சென்னையில் சுற்றுலா மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலை, எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரை போக்குவரத்து துறை ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் பிற்பகல் 1.25 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட தொடங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் இணை கமிஷனர் மனோகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு, கோஷமிட்டபடி போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை

பிற்பகல் 2.10 மணியளவில் போக்குவரத்து துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா, இணை கமிஷனர் வேலுசாமி ஆகியோர் டிரைவர்கள் சங்க முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து டிரைவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

Next Story