கட்டணம் இல்லா பஸ் பயண திட்டத்தால் எந்த பயனும் இல்லை முதியவர்கள் குமுறல்


கட்டணம் இல்லா பஸ் பயண திட்டத்தால் எந்த பயனும் இல்லை முதியவர்கள் குமுறல்
x
தினத்தந்தி 4 Jan 2018 5:15 AM IST (Updated: 4 Jan 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மாதத்திற்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால் கட்டணம் இல்லா பஸ் பயண திட்டத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என முதியவர்கள் குமுறுகின்றனர்.

அம்பத்தூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 60 வயது நிரம்பிய முதியவர்கள் பயன் பெறும் வகையில் ‘மூத்த குடிமக்களுக்கு கட்டணம் இல்லா பஸ் பயணம்’ என்கிற திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இத் திட்டத்தின் கீழ் 60 வயது நிரம்பிய முதியவர்கள் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை காட்டி மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லா பஸ் பயண அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

அதன் மூலம் அவர்கள் கட்டணம் இல்லா பஸ் பயணத்திற்காக மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 3 மாதங்களுக்கு 30 டோக்கன்களை பெறமுடியும்.

டோக்கன்கள் தீர்ந்துவிடுகின்றன

ஆனால் இந்த திட்டத்தால் தங்களுக்கு எந்த வித பயனும் இல்லை என மூத்த குடிமக்கள் குமுறுகின்றனர். மாதத்திற்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவது போதுமானதாக இல்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒருமுறை ஒரு இடத்திற்கு சென்று வர குறைந்த பட்சம் 3 முதல் 4 டோக்கன்கள் வரை தேவைப்படுகிறது. எனவே டோக்கன்கள் விரைவில் தீர்ந்துவிடுகின்றன.

அதாவது அரசின் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்தி மாதத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே மூத்த குடிமக்கள் பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. மற்ற வேளைகளில் அவர்கள் கட்டணம் செலுத்திதான் பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

குறைந்தபட்சம் 10 நாட்கள்

இதுகுறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர பஸ்நிலைய அலுவலகத்தில் கட்டணம் இல்லா பஸ் பயண அட்டை மற்றும் கட்டணம் இல்லா பஸ் பயணத்திற்கான டோக்கன்களை பெற வந்திருந்த முதியவர்கள் கூறியதாவது:-

கட்டணம் இல்லா பஸ் பயணத்திற்கான டோக்கன்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட மாநகர பேருந்து பனிமனை அலுவலகத்திற்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 முறை அலைய வேண்டி இருக்கிறது. இதற்கே அரசு தரும் கட்டணம் இல்லா பயண டோக்கன் கள் காலியாகி விடுகிறது.

எனவே மாதத்திற்கு குறைந்த பட்சம் 10 நாட்கள் மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்யும் வகையில் அரசு இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

பஸ்களில் பயணம் செய்யும்போது கண்டக்டர்களிடம், கட்டணம் இல்லா பஸ் பயண அட்டையை காட்டுகிறோம். ஆனால் அவர்களோ அதுமட்டும் போததாது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் காட்டவேண்டும் என கூறி நிர்ப்பந்திக்கின்றனர்.

ஸ்மார்ட் கார்டு

இதற்கு தீர்வு காணவும், வயதான காலத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை டோக்கன்களை பெற அலைவதை தவிர்க்கவும் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத்தக்க வகையில் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து மாநகர பஸ் அலுவலகங்களிலும் அனைத்து வேலை நாட்களிலும் மூத்த குடிமக்கள், கட்டணம் இல்லா பஸ் பயண அட்டை மற்றும் கட்டணம் இல்லா பஸ் பயணத்திற்கான டோக்கன்களை பெற வழிவகை செய்யவேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால்தான் எங்களுக்கு இத்திட்டத்தின் உண்மையான பலன் கிட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story