காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது வழக்கு தொடர்ந்தவர் பேட்டி


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது வழக்கு தொடர்ந்தவர் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2018 5:00 AM IST (Updated: 4 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் பேட்டி அளித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிவபக்தர் அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி மனுவை புகார் மனுவாக பதிவு செய்யும்படி சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏகாம்பரநாதர் கோயில் மற்றும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், கோவில் ஸ்தானிகர் ராஜப்பா உள்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்று சிலைகடத்தல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

வழக்கு தொடர்ந்தவர்

இந்த நிலையில் இந்த சிலை தொடர்பாக காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சிற்ப ஆகம சாஸ்திரங்களை முறையாக பின்பற்றாமல் அவசரம் அவசரமாக பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய சோமஸ்கந்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யும்போது அரசுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.

மூன்றே நாட்களில்...

புதிய சிலை பிரதிஷ்டை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்ய ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும். ஆனால் சோமஸ்கந்தர் சிலை பிரதிஷ்டை செய்ய மூன்றே நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடந்த 2016 டிசம்பர் மாதம் 5-ந்தேதி புதிய சிலை பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் ஆகம விதிகளை மீறி நிகழ்ச்சி நடப்பதாக பக்தர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தற்போது புதிய சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு அம்பலமாகி உள்ளது.

சிலைகள் மாயம்

மேலும் திருக்கோவிலில் உள்ள பைரவர் விநாயகர், முருகர், திருவாட்சி சிலைகளும் மாயமானதாக சந்தேகப்படுகிறோம். எனவே அரசு இது குறித்தும் கோவில் நகைகள் குறித்தும் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள சிறு கிராம கோவில்களில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பஞ்சலோக சிலைகள் உள்ளது. அனைத்து கோவில்களிலும் அரசு ஆய்வு செய்து சிலைகள் மற்றும் ஆபரணங் களை கணக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். புலன் விசாரணை முடிந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்டால் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story